Sunday, September 7, 2008

"நானு தமிழுதானுங்களே"

ஓர் உண்மைச் சம்பவத்தினை இங்கு கூறுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் - 1995-இல் நடந்தது.

சுங்கை பட்டாணியின் பொது மருத்துவமனையில் நடந்தது. மலேசியாவின் வடகிழக்கேயுள்ள கெடா மாநிலத்தின் முக்கிய நகரம் சுங்கைப் பட்டாணி. இந்த வட்டாரத்தில் கடந்த நூறாண்டுகளாகத் தமிழர்களும் தெலுங்கர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ரப்பர் எஸ்ட்டேட்டுகளில் தொழிலாளர்களாக வாழ்ந்துவருபவர்கள்.

இந்நாட்டில் SOCSO என்றொரு அமைப்பு உண்டு. தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக ஒரு நிதி ஒதிக்கீடு இருக்கிறது. அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலையின்போது ஏதும் காயமேற்பட்டாலோ அல்லது வேலைபார்க்க இயலாதவகையில் நோயேற்பட்டாலோ அவர்களுக்கு மருத்துவ உதவிக்காகவும் நஷ்டஈடாகவும் பென்ஷனாகவும் பயன்படுவதற்காக உள்ள நிதி அது.

அதற்காக எம்ப்லாயர்கள் தரப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையும் ஊழியர்கள் தரப்பில் ஒரு தொகையும் மாதந்தோறும் அந்த நிதிக்காகச் செலுத்தப்படும். ஊழியர்களின் பங்குத்தொகை அவர்களின் சம்பளத்திலிருந்து செலுத்தப்படும். ஸோக்ஸோ உதவி கோரிப் பலர் மனுச்செய்வார்கள்.

அதனைப் பரிசீலனை செய்வதற்காக ஸோக்ஸோ மீட்டிங்குகள் மருத்துமனையில் நடைபெறும். எந்த மருத்துவப்பிரிவு என்பதைப் பொறுத்து ஸோக்ஸோ கமிட்டியின் உறுப்பினர் அமைவர். அந்தக் கமிட்டியில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். மருத்துவமனையின் தலைவரே கமிட்டியின் தலைவர். குறிப்பிட்ட மருத்துவப்பிரிவின் தலைமை ஸ்பெஷலிஸ்ட், ஸோக்ஸோ நிறுவனத்தின் அதிகாரி ஆகியோர் மற்ற இருவர்.

ஒருமுறை பொதுமருத்துவப் பிரிவின் ஸோக்ஸோ மீட்டிங் நடந்தது. ·பிஸிஷியன், ஸோக்ஸோ ஆபிஸர், நான் ஆகிய மூவரும் ஒவ்வொரு கேஸாக நேரடியாகப் பார்த்துப் பரிசீலனை செய்துகொண்டிருந்தோம்.

அப்போது 'லீ ஸ்வீ லியான'் என்ற சீனப்பெயர் கொண்ட கேஸ் ·பைல் வந்தது. அதனைப் புரட்டிப்பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணை அழைக்கச்சொன்னோம். நர்ஸ் அந்தப் பெயரைக் கூப்பிட்டாள்.

உள்ளே வந்தார் ஒரு பெண். அழகாக சேலை கட்டியிருந்தார். நெற்றியில் பொட்டு. கைகளில் வளையல். முகமோ சீனத்தன்மை படைத்திருந்தது.

"நீங்க இல்லெம்மா. ஒங்களக் கூப்புடும்போது வாங்க" என்றேன்.

மீண்டும் நர்ஸ் கூப்பிட்டாள். மீண்டும் அந்தப் பெண்ணே உள்ளே வந்தார்.

"என்னம்மாயிது மறுபடியும் வர்ரீங்க. அடுத்தாப்புல கூப்புடுவாங்க. அப்ப வந்தாப்போதுமே."

"என்னத்தானுங்க கூப்டது"

"அப்டியா? பேரு என்ன...வேற பேரு சீனப்பேராயிருக்கே?"

"நானு தமிளுதானுங்க"

ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.

என் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டார், அந்தப்பெண்.

இங்குள்ள தமிழர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. சீனக்குழந்தைகளை அவை பிறந்ததுமே சொல்லிவைத்துத் தத்து எடுத்துக்கொள்வார்கள். பெண்குழந்தைகள்தாம் அவ்வாறு தத்தெடுக்கப்படும்.

ஆண்குழந்தைகள் மிகவும் அரிது. தமிழர் குழந்தைகளாகவே அவை வளர்க்கப்படும். ஆரம்பத்திலேயே பெயர்களைத் தமிழ்ப்பெயர்களாக சூட்டிவிடுவார்கள். விபரம் தெரிந்ததும்கூட அந்த சீனத்தமிழர்கள் தமிழராகவே நடந்துகொள்வார்களேயழிய பழைய குடும்பத்தைத் தேடியோ அல்லது சீனசமூகத்திலேயோ சேர்ந்துகொள்ளமாட்டார்கள்.

அந்தப்பெண்மணி தொடர்ந்து பேசினார்கள்.

"சின்னாப்போ நானு நம்ம வீட்டுக்கு வந்துட்டேனுங்க. ஆனா நம்ம வீட்டுல தமிள்ல பேர மாத்தலங்க. எஸ்டேட்டுங்க. அப்பல்லாம் இதெல்லாம் தெரியாதுங்க".

"சாதாரணமா பிள்ளைய தத்தெடுக்கவும் பேர மாத்துறதுதான பழக்கம்.", நான் சொன்னேன்.

"அதானுங்க. ஆனா நம்ம வீட்டுல செய்யலீங்க. அப்டியே வுட்டுட்டாங்க. நானும் பேசாம இருந்துட்டேங்க. வீட்டுல தமிள்லதானுங்க பேசுறது. என் வீட்டுக்காரரு நம்மாளுங்க. நம்மாளத்தான் கட்டிக்கிட்டேன். பிள்ளைங்களு எல்லாமே தமிளு ஸ்கூலுலதானுங்க படிக்குதுங்க"

"எங்க இருக்கிறீங்க".

"பீடோங் பக்கலில எஸ்டேட்டுலங்க".

இப்போது சொல்லுங்கள்.
யார் தமிழர்?
தமிழ்த்துவம் என்பது எது?

ஐஸ் கச்சாங்- மலேசியா


மலேசியாவின் புகழ்பெற்ற தின்பண்டங்களில் ஒன்று ஐஸ் கச்சாங் எனப்படுவது.

ஐஸ் கச்சாங்' என்பது, அந்தப் பெயர் குறிப்பிடுவதுபோலவே ஐஸ் தூளிலிருந்தும் கடலைகள் கலவையிலிருந்தும் செய்யப்படுவதுதான். இதன் அடிப்படைப் பொருள் ஐஸ்கட்டி. ஆனால் அதற்குள் சேரும் சாமான்களில் பல, தனித்தனியாகத் தயாரிக்கப் படுபவை.


1. ஐஸ்கட்டி

2. எண்ணெயில் வறுத்த வேர்க்கடலை

3. கிட்னி பீன்ஸ் என்னும் தட்டப்பயறு போன்ற பயறின் அவியல்

4. பெரிய ஜவ்வரிசி

5. சிவப்பு ஜெல்லி

6. கறுப்பு ஜெல்லி

7. செண்டோல் - இது அரிசி மாவில் செய்யப்படுவது.

அரிசிமாவில் பாண்டாங் என்னும் இலையைச் சேர்த்து, பச்சை நிறம் கொடுத்து, திரித்திரியாகப் பிழிந்து அவிக்கப்படுவது.

8. ஜாதிக்காய்ச் சீவல்

9. ஜாதிபத்திரி

10. பெரிய திராட்சை வற்றல்

11. பேரீச்சம்பழ துருவல்
13. மலாக்கா சர்க்கரை எனப்படும் கருப்பட்டிப் பாகு

14. ஸ்ட்ராபெர்ரி ஸிரப்

15. Vaporised milk

17. Cream

18. ஸீரப்பில் ஊறவைத்த இனிப்புச் சோளம்.

முதலில் ஒரு கின்னத்தில் மேற்படி சரக்குகளைப் போட்டு விடுவார்கள். அதன ்பின்னர் '·ஸ்ஸ்·ஸ்ஸ்·ஸ்ஸ்·ஸ்ஸ்·ஸ்ஸ்·ஸ்ஸ்', என்ற சப்தத்துடன் ஐஸ்கட்டியைத் துருவலாக்குவார்கள். அந்த சப்தத்தை அந்தத் துருவல் இயந்திரம்தான் போடும். அவர்கள் போடமாட்டார்கள். அவர்கள் ஐஸே கண்ணாயின நாயனார்களாக துருவல் இயந்திரத்தைத் திருகிக் கொண்டிருப்பார்கள்.

ஐஸ் அந்த சரக்குகளின்மேல் விழும்.
அதன் பின்னர் கிரீம், வேப்பரைஸ்ட் மில்க், ஸீரப், கருப்பட்டிப் பாகு ஆகியவற்றை ஐஸின் மேலே ஊற்றிவிடுவார்கள். ஒரு நீண்ட சிறிய கரண்டியையும் கொடுப்பார்கள்.
கேட்டுக்கொண்டால் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமும் அதன்மேல் போட்டு 'top-up' செய்து தருவார்கள்.
ஒரு economy ரகமும் இருக்கிறது.
முதலில் கொஞ்சம் ஐஸை உள்ளங்கையின் மீது துருவி விடுவார்கள். அதில் கிட்னி பீன்ஸ் அவியலையும் கொஞ்சம் கடலையையும் ஜெல்லியையும் கெட்டிப் பாலையும் போடுவார்கள். அதன்மேல் இன்னும் அதே அளவு ஐஸைத் துருவி விடுவார்கள். பிறகு அதனை உள்ளங்கைகளினால் அமுக்கி அழுத்திப் பந்து போல் செய்வார்கள். அதன்மீது ஸீரப், கருப்பட்டி பாகு ஆகியவற்றை ஊற்றுவார்கள்.
இதனைச் சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிடப்படுவது.
நான் பள்ளியில் படிக்கும்போது இது ஐந்துகாசாக இருந்தது. அதெல்லாம் ஐம்பது வருசக் கதை. இதனை 'ஐஸ் காப்பாய்' என்று சொல்வார்கள்.

தேங்காய் பறிக்கும் குரங்கு


மலேசியாவில் கிராமங்களைக் காம்ப்பொங்க்(kampong) என்று அழைப்பார்கள். தமிழில் 'கம்பம்' என்று சொல்வோம். மலேசியாவில் பதிமூன்று மாநிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பதினொன்று தீபகற்ப மலேசியா என்னும் மலாயாப் பகுதியில் இருக்கின்றன.

அவற்றில் வடமேற்கில் உள்ளது கெடா மாநிலம். பழைய கலத்துக் கடாரம்.கெடா மநிலத்தில் நெல்வயல்கள் அதிகம். விரித்துவிட்டப் பசுங்கம்பளங்களைப்போல பரந்து விரிந்து கிடக்கும். அவற்றின் நடுநடுவே களத்து மேடு போன்ற இடங்கள்.

தென்னை, கமுகு, வாழை, பலா போன்ற மரங்களுக்கு நடுவில் சில வீடுகள், கிணறு. வீடுகள் பெரும்பாலும் பலகையால் ஆனவை. அடிப்பாகம் சிமெண்டாலும் மேலே பலகையாலும் னவையும் உண்டு. பழங்காலத்து வீடுகள் மரத்தூண்களின்மீது காட்டப்பட்டிருக்கும்.

இவற்றைத்தான் வெள்ளையர்கள் தவறாக tree-houses என்று சொல்வதுண்டு. (நாற்பதாண்டுகளுக்கு முன்னர் ஆசிரியப்பயிற்சி பெறுவதற்காக என் அண்ணன் இங்கிலாந்து சென்றபோது அவரிடம் சில வெள்ளைக்காரர்கள் கேட்ட கேள்வி, "Is it true that you folks live on tree-tops?" அக்காலத்தில் 'அத்தாப்பு'(atap) என்னும் மரத்தின் தோகையை இணைத்துப் பின்னி கூரை போட்டிருப்பார்கள்.

மருத நிலத்துக்கம்பம் இப்படி இருக்கும். கடலோரத்தில் இருக்கும் கம்பங்கள் வேறுவகையாக விளங்கும். சிறிய ரப்பர் தோட்டங்கள், பழத்தோட்டங்களைச் சார்ந்த கம்பங்கள் இன்னொரு வகை. பல கம்பங்கள் ஆற்றங்கரைகளில் இருக்கும்.

அந்த மருத நிலத்துக் கம்பங்களைப் பார்க்கும்போது, "காணி நிலம் வேண்டும், பராசக்தி", என்று பாடவேண்டும் போலத் தோன்றும். ஒரு வகையான ஏக்கம் ஏற்படும். ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் மலேசியாவின் சட்டங்களின்படி மலாய்க்காரர்களைத்தவிர வேறு யாரும் Malay reserve lands வாங்கமுடியாது. நெல்வயல்கள் அனைத்துமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம்.

இந்த அழகிய கிராமங்களில் ஒரு காட்சியைப் பார்க்கலாம். ஒரு சைக்கிளை ஒரு மலாய்க்காரர் ஓட்டிகொண்டு செல்வார். அந்த சைக்கிளின் handle bar-இன் மீது ஒரு குரங்கு குத்தவைத்துக்கொண்டு ரொம்பவும் போர் அடித்த பார்வையோடு உட்கார்ந்திருக்கும். கழுத்தில் அலங்காரமான பட்டையன்று இருக்கும்.

டூரியான் மாஹாத்மியம்

டொரியான் என்பது ஒரு பழம். தென் கிழக்காசியாவின் சில பகுதிகளிம் மட்டுமே காணப்படும். "டூரி" என்ற மலாய்மொழிச்சொல் முள்ளைக் குறிப்பதாகும்.அந்தப் பழம் கடினமான ஒட்டால் போர்த்தப்பட்டது. ஓட்டில் கூரிய, கடினமான முட்கள் நெருக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும்.

பழக்கமில்லாதவர்கள் பழத்தைத் தூக்கிவிட முடியாது. முள்ளால் மூடப்பட்ட பழமாகையால் இது "டூரியன்" என்று பெயர் பெற்றது. தமிழர்கள் அதனை டொரியான் அல்லது டொரியாம்பழம் என்று சொல்வார்கள்.

ஓட்டைப் பிளப்பதுவும் கஷ்டம். தெரிந்தவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஒரு சில மர்மஸ்தானங்கள் பழத்தில் உண்டு. அங்கு கீறி, கூரிய கட்டையால் வகுந்து, நெம்பவேண்டும். இதையெல்லாம் செய்யும்போது தடித்த துணியை பலவாக மடித்து, பழத்தைப் பிடிக்கவேண்டும்.பழத்தைப் பிளக்க வேண்டும்.உள்ளே கூடுகளாய் அமைந்திருக்கும். அந்த கூடுகளில் மூன்று சுளைகள் வீதம் இருக்கும். கனமான கொட்டையுண்டு.

சதையை மட்டுமே உண்ணவேண்டும்.பழத்தை உடைத்தவுடன் சுளையைச் சாப்பிடுவதே நல்லது. கொஞ்சம் நேரமானாலும் நசுநசுத்துவிடும். இந்த உலகிலேயே வேறெதற்குமே ஒப்பிட முடியாதமாதிரி வாசம்(சிலருக்கு வீச்சம்; சிலருக்கோ நாற்றம்) அந்தச் சுளைகளுக்கு உண்டு. அதது அவரவர் டேஸ்ட்டைப் பொறுத்தது. சில வெள்ளைக்காரிகள் மயக்கம் போட்டு விழுவதும் உண்டு.

சதை இனிப்பாகவும் ஒரு குறிப்பிட்ட flavourஉடனும் விளங்கும். இதுவும் ஒப்புக்கோ உவமைக்கோ அப்பாற்பட்டது.ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் - நிருபமா. 'நிர் உபமா' - உவமைக்கு அப்பாற்பட்டவள். அதுபோல.