Sunday, September 7, 2008

தேங்காய் பறிக்கும் குரங்கு


மலேசியாவில் கிராமங்களைக் காம்ப்பொங்க்(kampong) என்று அழைப்பார்கள். தமிழில் 'கம்பம்' என்று சொல்வோம். மலேசியாவில் பதிமூன்று மாநிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பதினொன்று தீபகற்ப மலேசியா என்னும் மலாயாப் பகுதியில் இருக்கின்றன.

அவற்றில் வடமேற்கில் உள்ளது கெடா மாநிலம். பழைய கலத்துக் கடாரம்.கெடா மநிலத்தில் நெல்வயல்கள் அதிகம். விரித்துவிட்டப் பசுங்கம்பளங்களைப்போல பரந்து விரிந்து கிடக்கும். அவற்றின் நடுநடுவே களத்து மேடு போன்ற இடங்கள்.

தென்னை, கமுகு, வாழை, பலா போன்ற மரங்களுக்கு நடுவில் சில வீடுகள், கிணறு. வீடுகள் பெரும்பாலும் பலகையால் ஆனவை. அடிப்பாகம் சிமெண்டாலும் மேலே பலகையாலும் னவையும் உண்டு. பழங்காலத்து வீடுகள் மரத்தூண்களின்மீது காட்டப்பட்டிருக்கும்.

இவற்றைத்தான் வெள்ளையர்கள் தவறாக tree-houses என்று சொல்வதுண்டு. (நாற்பதாண்டுகளுக்கு முன்னர் ஆசிரியப்பயிற்சி பெறுவதற்காக என் அண்ணன் இங்கிலாந்து சென்றபோது அவரிடம் சில வெள்ளைக்காரர்கள் கேட்ட கேள்வி, "Is it true that you folks live on tree-tops?" அக்காலத்தில் 'அத்தாப்பு'(atap) என்னும் மரத்தின் தோகையை இணைத்துப் பின்னி கூரை போட்டிருப்பார்கள்.

மருத நிலத்துக்கம்பம் இப்படி இருக்கும். கடலோரத்தில் இருக்கும் கம்பங்கள் வேறுவகையாக விளங்கும். சிறிய ரப்பர் தோட்டங்கள், பழத்தோட்டங்களைச் சார்ந்த கம்பங்கள் இன்னொரு வகை. பல கம்பங்கள் ஆற்றங்கரைகளில் இருக்கும்.

அந்த மருத நிலத்துக் கம்பங்களைப் பார்க்கும்போது, "காணி நிலம் வேண்டும், பராசக்தி", என்று பாடவேண்டும் போலத் தோன்றும். ஒரு வகையான ஏக்கம் ஏற்படும். ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் மலேசியாவின் சட்டங்களின்படி மலாய்க்காரர்களைத்தவிர வேறு யாரும் Malay reserve lands வாங்கமுடியாது. நெல்வயல்கள் அனைத்துமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம்.

இந்த அழகிய கிராமங்களில் ஒரு காட்சியைப் பார்க்கலாம். ஒரு சைக்கிளை ஒரு மலாய்க்காரர் ஓட்டிகொண்டு செல்வார். அந்த சைக்கிளின் handle bar-இன் மீது ஒரு குரங்கு குத்தவைத்துக்கொண்டு ரொம்பவும் போர் அடித்த பார்வையோடு உட்கார்ந்திருக்கும். கழுத்தில் அலங்காரமான பட்டையன்று இருக்கும்.

No comments: